வங்கிகளின் புதிய விதிமுறை:
சென்னை: பாஸ்புக் என்ட்ரி செய்வது முதல் கணக்கில் பணம் டெபாசிட் செய்வது வரை ஒரு மாதத்தில் 5 தடவைக்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோர் பாங்கிங் வசதியால் முக்கிய இடங்களில் உள்ள சில குறிப்பிட்ட கிளைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரிக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக, மற்ற கிளைகளில் பெறப்படும் சேவைக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துள்ளன. உதாரணமாக, மற்ற கிளைகளில் பாஸ்புக் என்ட்ரி செய்வதற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரூ.10 கட்டணம் பிடித்தம் செய்கிறது.
கணக்கு வைத்திருக்கும் கிளையுடன் வாடிக்கையாளர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காக மற்ற கிளையில் சேவை பெறுபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கிறோம் என ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சில வங்கிகள், கரன்ட் அக்கவுன்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதே கிளையிலோ அல்லது மற்ற கிளையிலோ பணம் செலுத்துவதற்கும் கட்டணம் வசூலிக்கின்றன. வர்த்தக நிறுவனங்கள் தினமும் பணம் செலுத்துவதால் வங்கி ஊழியரின் வேலை அதிகரிப்பதுடன், அவர்களின் பணத்துக்கு பாதுகாப்பு வழங்கு கிறோம். எனவேதான் கட்டணம் வசூலிக்கிறோம் என வங்கிகள் தெரிவித்துள்ளன. மற்ற கிளையில் ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்யும் கரன்ட் அக்கவுன்ட் வாடிக்கையாளர்களிடம் சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கிறோம் என இந்தியன் வங்கி தலைவர் டிஎம் பாசின் தெரிவித்துள்ளார்.
சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்தில் 5 தடவைக்கு மேல் பரிவர்த்தனை செய்தால் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும் என எச்டிஎப்சி வங்கி அறிவித்துள்ளது. இது கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஒரு ஆண்டில் 100 தடவைதான் பரிவர்த்தனை செய்ய முடியும். இதுபோன்ற கட்டணங்களால் கோர் பாங்கிங் வசதி வாடிக்கையாளர்களுக்கு பயனற்றதாகி விடும் என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments