இந்திய ரூபாய்க்கான புதிய அடையாளக் குறியீட்டை, மத்திய அமைச்சரவை இன்று இறுதி செய்து ஒப்புதல் அளித்தது. இந்திய ரூபாய்க்காக தெரிவு செய்யப்பட்டிருந்த ஐந்து குறியீடுகளில், ஐ.ஐ.டி. முதுகலை படிப்பு மாணவர் உதய் குமார் வடிவமைத்த குறியீட்டையே மத்திய அமைச்சரவை தேர்வு செய்தது. இந்தியாவின் நாணயத்தைக் குறிப்பிட இன்று வரை ஒரு ரூபாய் என்றால் Re, ஒரு ரூபாய்க்கு மேல் என்றால் Rs அல்லது INR என்ற எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகிறது. டாலர் ($), பவுண்ட் (£), யூரோ (€) முதலியவற்றுக்கு நிரந்தரமாக குறியீடு இருப்பதைப் போல் இந்திய ரூபாய்க்கும் புதிய அடையாளக் குறியீடு உருவாக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
இதையடுத்து, அடையாளக் குறியீட்டுக்கென போட்டி ஒன்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு செய்யப்படும் குறியீட்டுக்கு ரூ.2.5 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அண்மையில், மொத்தம் 5 அடையாளக் குறியீடுகள் தெரிவி செய்யப்பட்டன. இதில், ஒன்றினை மத்திய அமைச்சரவை இன்று இறுதி செய்து ஒப்புதல் அளித்தது. தற்போது இலங்கை, நேபாளம், பாகிஸ்தான், இந்தோனேஷியா போன்ற நாடுகளின் நாணயங்களுக்கும் ரூபாய் என்ற பெயர்தான் நடைமுறையில் உள்ளது. உச்சரிப்பில் தான் ரூபா என்று சற்று வித்தியாசம் காணப்படுகிறது. இவற்றையும் ஆங்கிலத்தில் Rs அல்லது Re என்றே அழைக்கிறார்கள்.





0 comments