மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தியதை தொடர்ந்து, வரும் 1ஆம் தேதி முதல் சரக்கு லாரி கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தப் போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது பற்றி மதுரை தலைவர் சாத்தையா, செயலர் சாகுல் ஹமீது தெரிவித்துள்ளதாவது; கடந்த ஓராண்டில் மூன்றாவது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் எண்ணெய் நிறுவனங்களே, சில்லரை விற்பனை விலையை தன்னிச்சையாக நிர்ணயம் செய்யலாம் என்று மத்திய அரசு அதிகாரம் அளித்தது கண்டிக்கத்தக்கது.
டீசல் விலை உயர்வால், வரும் 1ம் தேதி முதல், சரக்குகளுக்கு லாரி கட்டணங்கள் 15 சதவீதம் உயர்த்தப்படுகின்றன. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் கூடுதலாக வசூலிக்கப்படும் சுங்க வரிகளால் அவதிப்படும் லாரி உரிமையாளர்களுக்கு, இந்த டீசல் விலை உயர்வு பெரும் சுமையாக உள்ளது.
மதுரையில் இருந்து சென்னை சென்று திரும்பும் லாரி ஒன்றுக்கு, சாலை சுங்க வரியாக மட்டும் 3,500 ரூபாய் கட்ட வேண்டியுள்ளது. தமிழகத்தின் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் புதிய கட்டண முறையை அமல்படுத்தியதால், கட்டண விகிதாச்சாரம் அதிகமாகி உள்ளது.
எனவே, கி.மீ., ஒன்றுக்கு 1.30 ரூபாய் சுங்க வரி வசூலிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், ஏற்கனவே அறிவித்தபடி, தென்மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன கூட்டமைப்பு, ஆக., 2ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். (டிஎன்எஸ்)




0 comments