இயக்குனர் பார்வை: பூபதி பாண்டியனின் காதல் சொல்ல வந்தேன்.
"தேவதையை கண்டேன்', "திருவிளையாடல் ஆரம்பம்', "மலைக்கோட்டை' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜி. பூபதி பாண்டியன், தற்போது கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் "காதல் சொல்ல வந்தேன்". இப்படத்தை "எஸ் 3 ஃபிலிம்ஸ்" என்ற பட நிறுவனத்தின் சார்பில் ஜெயகுமார் தயாரித்திருக்கிறார்.
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான "கனா காணும் காலங்கள்" நாடகத்தில் நடித்த பாலாஜி, இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் . இவர் 'பட்டாளம்' படத்தில் நடித்தார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் மேக்னா நடிக்கிறார். இவர் "தப்புத்தாளங்கள்' படத்தில் நடித்த நடிகர் சுந்தரின் மகள் ஆவார். இவர்களுடன் சபேஷ், கார்த்திக், ஹீரா, லீனா, ஆர்.சுந்தர்ராஜன், தம்பி ராமையா, எலிசபெத், தாஜ்கான், செவ்வாளை, டைகர் தங்கதுரை ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
படம் குறித்து இயக்குனர் பூபதி பாண்டியன் பேசுகையில்,
""நீங்கள் பெரிய ஹீரோக்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்துவிட்டு இப்போது புதுமுகங்களை வைத்து இயக்கக் காரணம் என்ன? என்று நிறைய பேர் கேட்டார்கள். என்னை பொறுத்தவரையில் கதைக்கு கதாபாத்திரங்கள்தான் முக்கியம். நான் "தேவதையை கண்டேன்' படம் எடுக்கும்போது "துள்ளுவதோ இளமை' படம் மட்டும்தான் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்தது. "காதல் கொண்டேன்' படம் அப்போது தயாரிப்பில் இருந்தது.
புதுமுகங்களை வைத்து இயக்கியது கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது. ஆனாலும் பாலாஜி, மேக்னா இருவரும் நான் எதிர்பார்த்த மாதிரியே கதாபாத்திரத்தை உள்வாங்கி மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
நிறைய காதல் படங்கள் வருகிறது. இந்தப் படத்தில் எந்த விதத்தில் காதலை வித்தியாசமாக சொல்றீங்க?
கதாநாயகன், கதாநாயகி இரண்டு பேரும் காதலை சொல்ல வரும்போதெல்லாம் அவங்களால் காதலை சொல்ல முடியாமப் போகுது. அது புதுசா இருக்கும். அதற்கு சூழ்நிலைகள்தான் காரணமாக அமையும்.
அந்த சூழ்நிலைகளுக்கு யார் காரணம்?
அதுக்கு நான் தான் காரணம் (சிரிக்கிறார்). அதாவது நான் அமைத்திருக்கும் திரைக்கதையில் அந்த விஷயங்கள் வரும். அதை இப்போது சொல்ல முடியாது. படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஆர்யா என்ன பாத்திரத்தில் நடிக்கிறார்?
ஆர்யா எனக்கு தம்பி மாதிரி. நான் இந்தப் படத்தில் ஒரு கேரக்டர் இருக்குன்னு சொன்னதும், ""கதை என்ன?''னு கூட அவர் கேட்கல. ""எப்போ ஷூட்டிங் வரணும் பிரதர்''னுதான் கேட்டார். அவர் ஒரு டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதல் செய்ய ஐடியா தர்ற கதாபாத்திரம் அது. அதை ஒரு பிரபல ஆள் செய்தால்தான் நல்லா இருக்கும்னு தோன்றியது. அதனால்தான் ஆர்யாவை நடிக்க வைத்தேன்.
இசையமைப்பாளர் யுவனுடன் கூட்டணி அமைத்தது குறித்து?
நானும், யுவனும் முதன் முதலா இந்தப் படத்தில் சேர்ந்து வேலை பார்த்திருக்கோம். காதல் கதைன்னா அல்டிமேட் சாய்ஸ் யுவன்தான். இதை பல படங்களில் நிரூபித்த யுவன், இந்தப் படத்திலும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். கதையை தலாட்டி நகர்த்திச் செல்லும் பணியை யுவன் சிறப்பாக செய்திருக்கிறார்.
இதுவரை பாடல்களை கேட்ட எல்லோரும் "பாடல்கள் அற்புதம்' என்று பாராட்டியிருக்கிறார்கள். இந்த வருடத்தின் மியூசிக்கல் ஹிட்டாக இந்தப் பாடல்கள் இருக்கும். அதைப்போல நா. முத்துக்குமாரின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் பேசப்படும். கதையுடன் ஒட்டி வரும் பாடல்கள் எப்போதுமே வெற்றி பெறும். சாரதியும் ஒரு பாடல் எழுதி இருக்கிறார்.
உங்கள் படங்களில் இடம் பெறும் கலகலப்பான நகைச்சுவை காட்சிகளை இந்தப் படத்திலும் எதிர்பார்க்கலாமா?
நிச்சயமாக. காதல் கதைதான் என்றாலும் திரைக்கதையில் காமெடியும் இருக்கும். தியேட்டரில், படத்தின் ஆரம்பத்தில் இருந்து சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அதற்கு நேர்மாறாக கிளைமாக்ஸ் காட்சியை எல்லோரும் ஃபீல் பண்ணி பார்ப்பாங்க. ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் விதமாக இந்தப் படம் இருக்கும்.
இப்படத்திற்கு ராணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலை இயக்கத்தை கார்த்திக் ராஜ்குமார் செய்திருக்கிறார். நடனங்களை பாபி ஆண்டனி அமைக்க, சண்டைக் காட்சிகளை கனல் கண்ணன் அமைத்திருக்கிறார்'' என்றார்.
அண்மை படங்கள் மற்றும் பாடல்கள் கேட்க
0 comments