லண்டன்: விம்பிள்டன் டென்னிசில் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில், நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார். உலகின் "நம்பர்-1' வீரர் ஸ்பெயினின் நடால், அரையிறுதிக்கு முன்னேறினார்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் 6 முறை விம்பிள்டன் சாம்பியன் பெற்றவரும், "நம்பர்-2' வீரருமான பெடரர், செக் குடியரசின் தாமஸ் பெர்டிக்கை (13வது ரேங்க்) சந்தித்தார். இதன் முதல் செட்டை 6-4 என பெர்டிக் வென்றார். அடுத்த செட்டில் எழுச்சி கண்ட பெடரர் 3-6 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். ஆனால் மூன்றாவது செட்டை 6-1 என எளிதாக பெர்டிக் வென்றார். தொடர்ந்து அசத்திய இவர் அடுத்தசெட்டையும் 6-4 என தனதாக்கினார்.
இதையடுத்து 4-6, 6-3, 1-6, 4-6 என்ற செட்கணக்கில் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார். விம்பிள்டன் டென்னிசில் முதன் முறையாக பெர்டிக், அரையிறுதிக்கு முன்னேறி சாதித்துள்ளார்.
நடால் அபாரம்:
மற்றொரு காலிறுதியில் "நம்பர்-1' வீரர் நடால், சுவீடனின் சோடர்லிங்கை எதிர்கொண்டார். இதில் 3-6, 6-3, 7-6, 6-1 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற நடால், அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
டோகோவிச் அசத்தல்:
மற்றொரு காலிறுதியில் செர்பியாவின் நோவக் டோகோவிச், சீன தைபேயின் யென்-ஹிசுன் லுவை 6-2, 6-2 என்ற நேர்செட்களில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார்.
செரினா வெற்றி:
நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், சீனாவின் நா லீயை 7-5, 6-3 என வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.
வில்லியம்ஸ் சகோதரிகள் ஏமாற்றம்
பெண்கள் இரட்டையர் காலிறுதியில் உலகின் "நம்பர்-1' ஜோடியான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செரினா வில்லிம்ஸ் சகோதரிகள், ரஷ்யாவின் வெஸ்னினா, சுவனரேவா ஜோடியிடம் 6-3, 3-6, 4-6 என்ற செட்கணக்கில், தோல்வியடைந்து வெளியேறினர்.
போபண்ணா ஜோடி தோல்வி
ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பாகிஸ்தானின் குரோஷி ஜோடி, ஆஸ்திரியாவின் மெல்ஜர்-ஜெர்மனியின் பெட்ஸ்னர் ஜோடியிடம் 6-4, 7-6, 6-2 என்ற செட்களில் தோல்வியடைந்தனர்.





0 comments