எஸ்.எஸ்.மியூசிக் 2006-இல் நடத்திய "எஸ் 5 (S5)' என்ற குரல் தேர்வில் ஐந்தாயிரம் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர் பின்னணி பாடகி சுவி. சமீபத்தில் வெளிவந்த "சரோஜா' படத்தில் ""கோடான கோடி...'' என்னும் பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
இப்படத்தைத் தொடர்ந்து "ஏகன்', "ஆதவன்', "அலிபாபா', "ஐந்தாம் படை', "வாமனன்', "மாசிலாமணி', "பேராண்மை', "நான் அவனில்லை' போன்ற படங்களைத் தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "ராவணன்' படத்தில் ""கெடாக்காரி...'' என்னும் பாடலைப் பாடியிருக்கிறார்.
சுவி கூறுகையில்
""ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "அழகிய தமிழ் மகன்' படத்தில் கோரஸ் பாடினேன். இப்போது அவரது இசையிலேயே "ராவணன்' படத்தில் பாடியிருப்பது சந்தோஷமாக உள்ளது. எங்க வீட்டில் யாரும் இசைத்துறையைச் சேர்ந்தவர்கள் கிடையாது. நான் பயோ-டெக்னாலஜி படிச்சிருக்கேன். எனக்கு விஞ்ஞானியாக வேண்டுமென்ற கனவு இருந்தது.
ஆனால், பாடுவதில் எனக்கு ஆர்வம் இருந்ததால் நான் திரைத்துறைக்குள்ளே வந்து விட்டேன். படிப்பு முடித்ததும் எனக்குப் பெரிய நிறுவனங்களில் இருந்தெல்லாம் வேலை வாய்ப்பு வந்தது. ஆனால், இசையின் மீதுள்ள ஆர்வத்தால் அதையெல்லாம் தவிர்த்து விட்டேன்.
தற்போது "சிக்கு புக்கு' படத்தில் ஒரு கிளாசிக்கல் மெலடி பாடல் பாடியிருக்கிறேன். அந்தப் பாட்டு ரொம்ப நல்லா வந்திருக்குன்னு என்னுடைய நண்பர்கள் சொல்லியிருக்காங்க. இந்தப் பாடல் வெளியான பிறகு எனக்கு அதிகமான மெலடிப் பாடல்களைப் பாட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
சினிமாவில் மற்றவர்களின் இசையமைப்பில், அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதைப் பாடிக் கொடுக்கின்றோம். ஆனால், மியூசிக் ஆல்பத்தைப் பொருத்தவரையில் நம்முடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கலாம்.
அதற்காகத்தான் தற்போது இசையமைப்பாளர் பிரவீன் மணி ஸாருடன் சேர்ந்து சொந்தமாக ஒரு ஆல்பம் பண்றேன். இது ஒரு உலகளாவிய ஆல்பமாக இருக்கும். இதில் இடம்பெறும் பாடல்களை நானே எழுதியிருக்கிறேன். இந்த ஆல்பத்தை செப்டம்பர் மாதம் வெளியிடுகிறோம்'' என்றார்.
0 comments